ஒருவர் தனக்கென்று சொந்தமாக ஒரு வீடோ அல்லது நிலமோ வாங்கும்போது மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். நீண்ட காலமாக, சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை மூலதனமாக வைத்து ஒருசிலர் வீடு வாங்குவார்கள். வங்கியிடமிருந்தோ அல்லது வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனத்திடமிருந்தோ கடன் பெற்று, ஒரு சிலர் வீடு வாங்குவார்கள். ஒரு சிலர் முதலீடு செய்யும் நோக்கத்திலும் வீடு வாங்குவார்கள். எப்படி இருந்தாலும், ஒரு வீடு அல்லது நிலம் வாங்கும் போது, முக்கியமான சான்றிதழ்களை வாங்கிப் பார்வையிட வேண்டும். தவறினால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும்.
வீடு வாங்குபவரை விட, கட்டுமான நிறுவனங்கள், பல முக்கியமான சான்றிதழ்களை வாங்க வேண்டும். ஒரு கட்டுமானத்தைத் தொடங்கும் முன், அந்த நிறுவனம், சுற்றுச்சூழல், மின்சாரம், தீயணைப்பு, நீர் போன்ற பல துறைகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழை (No Objection Certificate – NOC) வாங்க வேண்டும். மேலும் மாநகராட்சி, நகராட்சி, உள்ளூர் திட்டக் குழுக்கள் ஆகியவற்றிடமிருந்து அங்கீகாரம் பெற வேண்டும். இந்தச் சான்றிதழ்களையெல்லாம் வீடு வாங்குபவர் பார்வையிட வேண்டும். இவைகளின் நகல்களைக் கேட்டுப் பெறவேண்டும். கட்டுமான நிறுவனம் தடையில்லாச் சான்றிதழையும், தொடக்கச் சான்றிதழையும் பெற்று விட்டாலே போதும், அவைகளின் நகல்களை வாங்கியபிறகு, ஒருவர் வீடு வாங்கலாம்.
இது மட்டுமல்லாமல் வீட்டின் மூலப் பத்திரங்களின் நகல்களை வாங்க வேண்டும். முக்கியமாக வில்லங்கமில்லா சான்றிதழை (Encumbrance Certificate – EC) வாங்க வேண்டும். குறிப்பிட்ட வீடு, புறம்போக்கு நிலத்தில் கட்டப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நில அளவைப் புத்தகம் அல்லது நகர சர்வே வரைபடம், பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களின் நகல்களைப் பெற வேண்டும். குறிப்பிட்ட நிலத்தின் வழியாக மின்சாரத் தடம், தொலைபேசித் தடம்,
நீர்த் தடம் அல்லது ஏதேனும் பாதை இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குளமோ, ஏரியோ, ரயில்வே இருப்புப் பாதையோ அருகில் இருந்தால், தடையில்லாச் சான்றிதழை அவசியம் பெற வேண்டும்.
குப்பைக் கிடங்கு, மயானம், கல்குவாரி ஆகியவற்றிற்கு அருகே இடம் அல்லது வீடு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். விமான நிலையத்திற்கு ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் வீடு இருந்தால், விமான நிலைய ஆணையத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். இப்படிப் பல்வேறு சான்றிதழ்களையும் பெற்று, தகுந்த சட்ட ஆலோசகரைக் கலந்து ஆலோசித்து, பின்னர் வீடு அல்லது நிலம் வாங்கினால் மன நிம்மதியுடன் வாழ்வது மிகவும் நிச்சயம் !!
- முனைவர் துரை. சிவப்பிரகாசம்,
உளவியல் ஆலோசகர் ,
ஈரோடு.
கைபேசி : 94421 35600