வீட்டுச் சுவருக்கு வண்ணம் பூசும் கலாச்சாரம் பல்லாண்டுக் காலத்துக்கு முன்பிருந்தே இந்தியாவில் இருந்துவரும் ஒரு வழக்கமாகும். தங்கள் வீட்டை வெயில், மழை, காற்று போன்ற இயற்கையின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்காகவும், எறும்பு, கரையான் போன்ற சிறு பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்காகவும் சுவர்களில் வண்ணம் பூசினார்கள். வெறும் வண்ணங்களை மட்டும் பூசாமல் அதில் அழகான சித்திரங்களை, கோலங்களை வரைந்தனர். அது ஒரு பண்பாடாகவே ஆனது. கோண்டு, மந்தனா போன்ற ஓவியக் கலைகளும் வளர்ந்தன.
இன்றைக்கு சுவர்களில் ஓவியம் வரைவதற்குப் பதிலாக அழகான வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டும் வழக்கம் அதிகரித்துள்ளது. அதாவது சுவர் ஓவியங்களின் இடத்தைச் சுவரொட்டி எடுத்துக்கொண்டுவிட்டது. வீட்டுக்கு வண்ணம் பூசிய பிறகு இந்தச் சுவரொட்டிகளை ஒட்டி வீட்டின் அழகைக் கூட்டலாம். இந்தச் சுவரொட்டிகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன.
சுவரொட்டிகளை வாங்கி வீட்டை அலங்கரிக்கத் தீர்மானிக்கும் முன் சில விஷயங்களை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். சுவரொட்டியை எந்த அறையில், எந்தப் பக்கச் சுவரில் ஒட்டப் போகிறோம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு அந்தச் சுவரில் பூசப்பட்டுள்ள வண்ணத்துக்குத் தகுந்தாற்போல் ஒரு சுவரொட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால் அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
வரவேற்பறை, சமையலறை, படுக்கையறை, குழந்தைகள் படுக்கையறை, சாப்பாட்டறை என ஒவ்வோர் அறைக்கும் தனித் தனியான சுவரொட்டிகள் இருக்கின்றன. அதனால் அறைக்கேற்ப சுவரொட்டிகளைத் தேர்வுசெய்ய வேண்டும். வரவேற்பறைச் சுவரொட்டிகளில் பூக்கள், மரம், விலங்குகள், பழங்குடிச் சித்திரம் போன்ற பல வகை இருக்கின்றன. மரச் சித்திரத்திலும் பல வடிவங்கள் இருக்கின்றன. ஞாபக மரம் (Memory Tree) சுவரொட்டி, குடும்ப ஒளிப்படங்களை மாட்டிவைத்துக்கொள்ளும் இடத்துடன் வரும். இந்தச் சுவரொட்டிகள் ரூ.200லிருந்து கிடைக்கின்றன. இந்தச் சுவரொட்டிகள் வீட்டின் அமைப்பையே மாற்றி அழகாக்கிவிடும் தன்மை கொண்டவை.