முனைவர் துரை. சிவப்பிரகாசம், தலைவர், சுசி கன்சல்டன்ஸி சர்வீசஸ் (SCS),
ஈரோடு. கைபேசி : 9442135600
ஈசானிய மூலை
ஒரு வீட்டில் பூஜை அறை மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு அறை. இந்த அறையிலிருந்து தான் நேர்மறை அதிர்வு உருவாகி, வீடு முழுக்கப் பரவும். இந்த நேர்மறை அதிர்வு தான், வீட்டில் வசித்து வரும் அனைவரின் உடல் நலத்தையும் மன நலத்தையும் நன்கு பாதுகாக்கும். இத்தகைய நேர்மறை அதிர்வு உருவாக வேண்டும் என்றால் பூஜை அறை வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட வேண்டும் வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டில், பூஜை அறை, ஈசானிய மூலையில் (வடகிழக்கு மூலையில்) அமைக்கப்பட வேண்டும். ஒரு வீட்டில், ஈசானிய மூலையில் பூஜை அறை அமைக்கப்பட இயலாவிட்டால், அந்த வீட்டின் கிழக்கு அல்லது வடக்குப் பகுதியில் பூஜை அறையை அமைத்துக் கொள்ளலாம். மற்ற திசைகளில் பூஜை அறையை அமைக்கக் கூடாது.
தரைத் தளம்
ஒரு வீட்டில் பல தளங்கள் இருந்தால், தரைத் தளத்தில் மட்டும் தான் பூஜை அறை அமைக்கப்பட வேண்டும். மற்ற தளங்களில் அமைக்கப்படக் கூடாது. பூஜை அறையின் சுவருக்கு அடுத்தாற்போல் கழிவறையோ, குளியலறையோ இருக்கக் கூடாது. பூஜை அறை, கழிவறைக்கு மேலேயோ அல்லது கீழேயோ இருக்கக் கூடாது. மாடிப்படிகளுக்குக் கீழ் பூஜை அறையை அமைக்கக் கூடாது.
பூஜை அறையின் தரை
பூஜை அறையின் தரையில் மார்பிள் பதிக்கப்பட வேண்டும். அப்படி மார்பிள் பதிக்கப்பட இயலாவிட்டால், வெள்ளை நிறத்தில் உள்ள டைல்ஸ் பதிக்கலாம்.
கதவு மற்றும் ஜன்னல்
பூஜை அறையின் கதவு மரத்தினால் செய்யப் பட்டதாக இருக்க வேண்டும். ஒற்றைக் கதவாக இருக்கக் கூடாது. பூஜை அறையின் வடகிழக்குப் பகுதியில் கதவு அமைக்கப்பட வேண்டும். பூஜை அறைக்கு வெளிப்புறத்தில் வடகிழக்குப் பகுதியில் ஜன்னல் இருக்கலாம். அந்த ஜன்னல் வழியாக சூரிய ஒளி பூஜை அறைக்குள் விழுமாறு ஜன்னல் அமைத்தால் மிகவும் சிறந்தது.
நிறங்கள்
பூஜை அறையில் பெயிண்ட் அடிக்கும் போது கவனம் தேவை. பூஜை அறையின் சுவர்களில் நேர்மறை அதிர்வைத் தரும் நிறங்களையே அடிக்க வேண்டும். வெள்ளை, வெளிர் மஞ்சள், வெளிர் நீலம் ஆகிய நிறங்கள் பூஜை அறைக்கு ஏற்றவை.
விளக்குகள்
பூஜை அறையில் பிரகாசமான விளக்குகளை அமைக்கக்கூடாது. மனத்திற்கு அமைதியும், சாந்தமும் தரும் வகையிலும், பூஜை அறை முழுவதும் வெளிச்சம் வரும் வகையிலும் விளக்குகள் அமைக்கப்பட வேண்டும்.
அலமாரி
பூஜை அறையில் ஒரு அலமாரி அமைக்கப் படலாம். அந்த அலமாரி, மரத்தினால் செய்யப் பட்டதாக இருக்க வேண்டும். பூஜை செய்யப் படுவதற்கு வேண்டிய சாமான்கள் மற்றும் பொருட்கள் ஆகியவை மட்டும் அந்த அலமாரியில் வைக்கப்பட வேண்டும். வேறு தேவை இல்லாத பொருட்களை அந்த அலமாரியில் வைக்கக் கூடாது.
பூஜை பாத்திரங்கள்
இரும்பிலான பாத்திரங்களைப் பூஜைக்குப் பயன்படுத்தக் கூடாது. அவை நேர்மறை சக்திகளை உள்வாங்க முடியாமல், எதிர்மறைச் சக்திகளையே உள்வாங்கும். வெள்ளி, தாமிரம், ஈயம் பூசப்பட்ட பித்தளை, மற்றும் மண்ணாலான பூஜை பாத்திரங்களை, பூஜைக்கு பயன்படுத்தலாம். இவைகள் நேர்மறை சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும். பூஜை செய்யும் போது மணி ஓசை எழுப்பலாம். அது நேர்மறை சக்திகளை வீடு முழுவதும் பரப்பும்.
கடவுள் படங்கள்
பூஜை அறையில் குலதெய்வத்தின் படம் நிச்சயம் இருக்க வேண்டும். எந்த இஷ்ட தெய்வத்தின் படத்தை வேண்டுமானாலும் பூஜை அறையில் மாட்டி வழிபட்டு வரலாம். பூஜை அறையின் அளவிற்கு ஏற்றவாறு கடவுள் படங்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும். கடவுள் படங்கள் மிகவும் அதிகமாக இருக்கக் கூடாது. ஒரே கடவுளின் இரண்டு படங்கள் இருக்கக் கூடாது. சேதப்படுத்தப்பட்ட அல்லது கிழிக்கப்பட்ட அல்லது உடைக்கப்பட்ட கடவுள் படங்கள் இருத்தல் கூடாது.
சுத்தம் மற்றும் வாசனை
பூஜை அறை, வீட்டின் புனிதமான அறையாக கருதப் படுவதால், அந்த அறை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளப்பட வேண்டும். குப்பை மற்றும் ஒட்டடை இல்லாமல் இருக்க வேண்டும். கடவுள் படங்கள், பூஜை பாத்திரங்கள் மற்றும் பூஜைப் பொருட்கள் ஆகியவை சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையின் தரையை அன்றாடம் துடைக்கவேண்டும். பூஜை அறையில் எப்போதும் நல்ல வாசனை இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பூஜை அறையை அமைத்தால், வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். வீட்டில் உள்ள அனைவரின் உடல் நலமும், மனநலமும் நன்றாக இருக்கும் என்பது மிகவும் நிச்சயம்!!