வீடுகளில் அலுமினிய ஜன்னல் வலை


வீடுகளில் வசிப்பவர்கள், வேறு எந்த விதமான பூச்சித் தொல்லைகளையும் தாங்கிக் கொள்ளலாம், ஆனால் கொசுத் தொல்லையைத் தான் தாங்கிக் கொள்ள முடியாது. பகலில் கடிக்கும் கொசுக்களால் டெங்குக் காய்ச்சல் உட்பட பல்வேறு உயிர்க்கொல்லி நோய்கள் வருகின்றன. இரவில் கொசுக்கடியால் உறக்கம்   கெடுகின்றது. உறக்கமின்மையால் அடுத்தநாள் உடல் சோர்வும் மனச் சோர்வும் ஏற்படுகின்றது.


கொசுக்களை விரட்டுவதற்கு பல்வேறு வழிமுறைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொசுக்களை விரட்ட கொசுவத்திச் சுருள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த கொசுவத்திச் சுருள் எரியும்போது வரும் புகையைச் சுவாசிப்பது சுமார் 75 முதல் 125 சிகரெட் புகைப்பதற்குச் சமம். இதை வீட்டிலுள்ளோர் சுவாசிக்கும் போது, பல்வேறு வகையான சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.


இதைத் தவிர பல மின்சார சாதனங்கள் மூலம் திரவத்தை ஆவியாக்கி அதன் மூலம் கொசுக்களை விரட்டும் முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையால் புகை வராது என்றாலும், இதன் மூலம் வரும் நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும். மேலும் இந்த முறையில் ஒரு விதமான மணம் வரும். இது பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இது தவிர கொசுக்கள் உடலில் கடிக்காமல் இருக்க ஒரு வகையான கிரீம்கள் உடலில் பூசிக் கொள்ளப்படுகின்றது. இதுவும் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.


தற்போது கொசுக்களை கொல்வதற்கு மின்சாரத்தால் இயங்கும் கொசு பேட் வந்துவிட்டது. இந்த பேட் மூலம் கொசுக்களை ஒருவர் விழித்திருக்கும் போது தான் கொல்ல முடியும். உறங்கும்போது எப்படி கொல்ல முடியும்?


எனவே இந்த முறைகளையெல்லாம் விட  கொசுக்கடியில் இருந்து தப்புவதற்கு மிகச் சிறந்த முறை,  கொசு வலையைப் பயன்படுத்துவதுதான். வீடுகளில் உள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றைக் கொசுவலை கொண்டு மூடிவிட வேண்டும். இந்தக் கொசு வலையில் பல வகைகள் உள்ளன. பல வீடுகளில், ஜன்னல்களில் மாட்டுவதற்கான நைலான் கொசுவலை (Netlon)  பயன்படுத்தப்படுகின்றது. இதை வேண்டும் போதெல்லாம் கழற்றி,  சுத்தம் செய்து மாட்டிக் கொள்ளலாம். ஆனால் இது எளிதில் சேதம் அடையும். அதிக காலம் நீடிக்காது. மேலும் உள்ளே வரும் காற்றின் அளவு குறையும்.


எனவே தற்போது இதற்கு மாற்றாக, அலுமினியக் கொசுவலை பயன்படுத்தப்படுகிறது. இது நுழைவாயில் கதவு மற்றும் ஜன்னல் கதவுகளுக்கு இணையாக பொருத்தப்படுகிறது. இந்த அலுமினிய வலை எளிதில் சேதமடையாது. நீடித்து உழைக்கும். மேலும் ஜன்னல் கதவை மட்டும் திறந்து வைத்தால் போதும், அதற்குள் இருக்கும் அலுமினிய வலை கொசுக்களைத் தடுக்கும். காற்றும் நன்றாக வரும். கண்ணாடி, மரம் மற்றும் இரும்பு ஆகிய அனைத்து வகை ஜன்னல்களிலும், இந்த அலுமினிய வலையைப் பொருத்த முடியும். இதைப் பக்கவாட்டிலும், மேலிருந்து கீழாகவும், இயங்கும் முறையில் அமைக்கலாம். அதேபோலத் திறந்து மூடும் வகையிலும் அமைக்கலாம். மடிப்பு முறையிலும் அமைக்கலாம்.


இந்தப் பல வகைகளிலும், திறந்து மூடும் வகையை காட்டிலும், பக்கவாட்டில் மூடும் கொசுவலையை அமைப்பது தான் மிகச் சிறந்தது. இதை எளிதில் அசைத்துப் பயன்படுத்த முடியும். ஆனால், கொசு வலை நகரும் தண்டவாளத்தில் சேரும் தூசிகளை அவ்வப்போது அகற்றி, சுத்தம் செய்து, இதை பராமரிக்க வேண்டும். அலுமினிய வலையையும், அவ்வப்போது சுத்தம் செய்து வர வேண்டும். இந்த முறையைப் பயன்படுத்தினால் கொசுக்களை விரட்டி விடலாம். உடல் நலத்திற்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படாது.


முனைவர் துரை. சிவப்பிரகாசம், தலைவர் - சுசி கன்சல்டன்சி சர்வீசஸ், ஈரோடு.


அலைபேசி – 94421 35600